தினமணி

2.4M Followers

தமிழக அளவில் 5வது சிறந்த பல்கலைக்கழகமாக அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தேர்வு

01 Jun 2020.5:10 PM

தமிழக அளவில் 5வது சிறந்த பல்கலைக்கழகமாக சிதம்பரம் அண்ணமலைப் பல்கலைக்கழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக (ஈ.டபிள்யு) நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அரசின் நிதியுடன் இயங்கும் பல்கலைக்கழகங்களை பல்வேறு காரணிகளின் அடிப்படையில் ஆய்ந்து ஆண்டுதோறும் தரவரிசைப் பட்டியலை புது தில்லியைச் சேர்ந்த எஜுகேஷனல் வேர்ல்ட் (ஈ.டபிள்யு) என்ற நிறுவனம் வெளியிடுகிறது. 2020ஆம் ஆண்டிற்கான ஈடபிள்யு ரேங்க் பட்டியலில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தேசிய அளவில் முதல் 150 அரசு பல்கலைக்கழகங்களில் 29வது சிறந்த பல்கலைக்கழகமாக இடம் பிடித்துள்ளது. மேலும் தமிழக அளவில் 5வது சிறந்த பல்கலைக்கழகமாக நிர்ணயித்துள்ளது. தர நிர்ணயம் செய்வதற்கு ஆசிரியர்களின் தகுதி ஆசிரியர்களின் நலன் மற்றும் மேம்பாடு பாடத் திட்டம் மற்றும் கற்பித்தல் தொழிற்சாலைகளுடன் தொடர்பு வளாக பணியமர்வு கட்டமைப்பு வசதிகள் சர்வதேசவாதம் சிறந்த தலைமைப் பண்புடன் நிர்வாகம் மற்றும் பல்துறைகளில் பல்வகைப் பாடத்திட்டங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தி இந்த தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது.

இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் வெ.முருகேசன் வெளியிட்டுள்ள பத்திரிகை குறிப்பு:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விளைவு அடிப்படையிலான கற்பித்தல் முறை கையாளப்படுகிறது. இதனால் கற்பித்தலின் விளைவான கற்றலை அளவிடத் தேவையான அளவுகோல்கள் பாடத்திட்டத்திலேயே புகுத்தப்பட்டுள்ளன. மாணவர்கள் விருப்பப்பாடங்களையும் தனித் திறன்களை வளர்க்க உதவும் மதிப்புக் கூட்டுப் பாடங்களையும் தங்கள் துறை மட்டுமன்றி பல்கலையின் எத்துறையிலிருந்தும் தெரிவு செய்து படிக்கலாம். பல்கலைக்கழகத்தின் திறன்மிகு ஆசிரியர்கள் சிறப்பான ஆய்வுகள், ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் பல்வேறு ஆய்வு நிதியுதவியுடன் ஆய்வுத் திட்டங்கள் மூலம் பல்கலைக்கழக வெப் ஆப் சயின்ஸ் ஹெச் இன்டெக்ஸ் குறியீடு 108 என்ற பெருமையைச் சேர்த்துள்ளனர்.

வகுப்பறைகள், நூலகங்கள், ஆய்வகங்கள், நவீன விலையுயர்ந்த ஆய்வு உபகரணங்கள், விடுதிகள், விளையாட்டு திடல்கள், உடற்பயிற்சி கூடங்கள், யோகா மையம், இணைய வசதி என அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் 90 ஆண்டுகளாக அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கல்வித் தொண்டாற்றி வருகிறது. திறன் மேம்பாட்டு மையம் மூலம் பல்வேறு திறன் வளர்ச்சி பயிற்சிகளும் திட்டங்களும் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமன்றி பள்ளிப் படிப்பில் இடை நின்ற இளைஞர்களும் பெண்களும் பயனடைந்துள்ளனர்.

பயிற்சி மற்றும் பணியமர்வு மையம் பல்வேறு வேலை வாய்ப்பு முகாம்களின் மூலம் மாணவர்களுக்கு வளாக பணியமர்வு கிடைக்க வழிவகை செய்கிறது. தொழிலதிபர்களாகவுள்ள முன்னாள் மாணவர்களும் வளாக பணியமர்வு வழங்குவதில் சிறந்த பங்காற்றுகின்றனர். பன்னாட்டு மாணவர்களுடனும் பன்னாட்டு பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மூலமும் சர்வதேச பண்புடன் பல்கலைக்கழகம் திகழ்கிறது. பல்வேறு புதிய செயல் திட்டங்களின் விளைவாக 2019-20 ஆண்டு என்.ஐ.ஆர்.எப் தர வரிசையில் 101-150 என்ற நிலையிலிருந்து ஈடபிள்யு ரேங்க் பட்டியலில் 29வது ரேங்க் பெற்றது குறிப்பிடத்தக்கது என்றார் துணைவேந்தர் வே.முருகேசன்.

Disclaimer

Disclaimer

This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt Publisher: Dinamani

#Hashtags