zee News

435k Followers

"உன்னை ஒதுக்கியவர்களே தேடி வருவார்கள்" கவனத்தை ஈர்க்கும் "தனித்திரு" குறும்படம்

23 Nov 2022.2:53 PM

Thanithiru Short Film: சென்னை அரசு எம்.ஜி.ஆர். திரைப்படக் கல்லூரி மாணவர்கள் மற்றும் கல்லூரியின் தலைவர் நடிகர் ராஜேஷ் முன்னிலையில் இயக்குனர், தயாரிப்பாளர் கே.ஆர் வெளியிட்ட குறும்படம் 'தனித்திரு'.

திரைப்படக்கல்லூரி மாணவரும், நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் ஜி.என்.ஆர் குமரவேலனிடம் உதவி மற்றும் இணை இயக்குனராக பணியாற்றிய S.K.செந்தில் இக்குறும்படத்தை இயக்கியுள்ளார்.

புறக்கணிப்பின் வலி இளம்வயதில் மிகக்கொடியது. அதை கடந்து வெல்வது என்பது பெரும் போராட்டம். அதிலும் சினிமாவில் சாதிப்பது மரணப் போராட்டம். பல கோடி கனவுகளில் ஒன்றிரன்டே நனவாகும். மற்றனைத்தும் தொடர் அவமானங்களால் மரித்துப் போகும். அப்படியிருந்தும் சினிமாவில் சாதிக்க மட்டும் ஏன் இத்தனை துடிப்பு? மற்ற எந்த துறையினரையும் விட இதில் வெல்பவர்கள் அடையும் அங்கீகாரமும், பெரும் செல்வமும், இறவாப் புகழுமே காரணம்.

அந்த வகையில் யார் உன்னை புறக்கணித்தாலும் தன்னம்பிக்கையோடு உழைத்தால் வெற்றி நிச்சயம். நீ வென்ற பிறகு உன்னை ஒதுக்கியவர்களே உன் தயவைத் தேடி வருவார்கள் என்பதை பொட்டில் அடித்தாற் போல் சொல்லவரும் குறும்படம் தான் 'தனித்திரு'.

தமிழக அரசு எம்.ஜி.ஆர் திரைப்பட கல்லூரியில் பயின்று, சன் தொலைக்காட்சியில் தலைமை நிகழ்ச்சி தயாரிப்பாளராக பணியாற்றிய S.K.செந்தில், இந்த படத்தை இயக்கியுள்ளார்.

ஒரே ஒரு கதாபாத்திரத்தை வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம் தற்போது சினிமாவில் சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு மட்டுமல்லாமல், வாழ்கையில் ஜெயிக்கப் போராடும் அனைவருக்கும் தன்னம்பிக்கையை கொடுக்கும். இந்த படத்தில் விஜய் ஷங்கர் புதுமுகமாக அறிமுகமாகி உள்ளார்.

மேலும் படிக்க: பிரபல நடிகரின் படத்தை கைவிட்டுவிட்டாரா இயக்குனர் வெற்றிமாறன்?

இக்குறும்படத்தில் ஊர்வசி அர்ச்சனா, இயக்குனர் சமுத்திரகனி, இயக்குனர் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன், எம். எஸ். பாஸ்கர் ஆகியோருடன் திரையுலகின் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களும் தங்கள் பங்களிப்பை தந்திருக்கின்றனர் என்பது 'தனித்திரு' குறும்படத்தின் தனிச்சிறப்பு.

கிளைமேக்சில் வரும் திருப்புமுனை காட்சி படத்தின் நாயகனுக்கு மட்டுமல்ல, கொஞ்சம் ரூட்டை மாற்றி வண்டியை திருப்பினால் யார் வேண்டுமானாலும் வெல்லலாம் என்ற ஆகப் பெரும் நம்பிக்கையை நமக்குள் விதைக்கும்.

ஆசைப்பட்டது கிடைக்காமல் போனால் என்ன? செத்தா விட்டோம்? விரும்பிய ஒன்று கைகூடா விட்டால் வாழ்க்கை அதோடு முடிந்துவிடப் போவதில்லை! சற்று மாற்றி யோசித்தால் உலகையே நம் பக்கம் திரும்பிப் பார்க்க வைக்கலாம் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருப்பதோடு, தற்கொலை எண்ணமே நமக்குள் வேண்டாம் என்றும் சொல்கிறது 'தனித்திரு' குறும்படம்.

மேலும் படிக்க: பிரம்மிக்க வைக்கும் காட்சிகள்! அவதார் 2 படத்தின் புதிய டிரெய்லர் வெளியானது!

இந்த படத்தின் வெளியீட்டு விழா தமிழக அரசு எம்.ஜி.ஆர் திரைப்பட கல்லூரியில் மாணவர்கள் மற்றும் கல்லூரி தலைவர் நடிகர் ராஜேஷ் முன்னிலையில் இயக்குனர் தயாரிப்பாளர் கே.ஆர் அவர்கள் வெளியிட இனிதே நடந்தேறியது.

'தனித்திரு' குறும்படத்தை பார்த்த மாணவர்களும் இப்படம் தங்கள் வாழ்வில் தன்னம்பிக்கை ஏற்படுத்தி இருப்பதாக இயக்குனர் S.K.செந்தில் உடன் நெகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்டனர். இயக்குனர் S.K.செந்தில் விரைவில் வெள்ளித்திரையில் படம் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: பொங்கலுக்கு தயாராகும் "வாரிசு" அடுத்த வாரம் க்ளைமாக்ஸ் ஷூட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

Disclaimer

Disclaimer

This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt Publisher: Zee News Tamil

#Hashtags