விகடன்

1.9M Followers

எமெர்ஜென்சி தினம்... 45 ஆண்டுகளுக்குப் பிறகும் தொடரும் அடக்குமுறை! #Emergency1975

25 Jun 2020.1:24 PM

1975, ஜூன் 25 - இந்திய அரசியல் வரலாற்றில் கறுப்பு நாளாகப் பலமுறை அடையாளப்படுத்தப்பட்ட நாள். இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கித் தந்ததாக உரிமை கொண்டாடும் ஒரு கட்சியின் தலைவரால் ஜனநாயகம், மக்களாட்சி, கருத்துச்சுதந்திரம் போன்ற விழுமியங்களின் குரல்வளை நெரிக்கப்பட்ட நாள். அன்றுதான் அன்றைய பிரதமர் இந்திராகாந்தியின் விருப்பத்தின்பேரில் அப்போதைய குடியரசுத்தலைவர் பக்ருதின் அலி அகமதுவால் நெருக்கடிநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. நெருக்கடிநிலைக் காலத்தில் நடந்த துயரங்களின் சாட்சியங்களாய் ரத்தத்தில் தோய்ந்த ஏராளமான பதிவுகள் இருக்கின்றன.

பங்களாதேஷ் விடுதலைக்காக பாகிஸ்தானுடன் இந்தியா நடத்திய போர், உள்நாட்டு நெருக்கடி என்று பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் நெருக்கடிநிலை கொண்டுவரப்பட்டதற்கு உண்மையான காரணங்கள் இந்திராவுக்கு நேர்ந்த அரசியல் நெருக்கடிகளும் அதை ஜனநாயகரீதியில் எதிர்கொள்ளத் துணிவற்ற அவரது மனநிலையும்தான்.

பெரியளவில் எதிர்க்கட்சிகள் இல்லாத நிலை இந்திராகாந்திக்கு எதேச்சதிகார மனநிலையை உருவாக்கியிருந்தது. இந்திரா பிரதமர் என்றால் அவரது மகன் சஞ்சய்காந்தி நிழல் பிரதமராக மாறியிருந்தார். இது காமராஜர் போன்ற மூத்த காங்கிரஸ் தலைவர்களிடமும் ஜெயப்பிரகாஷ் நாராயணன் போன்ற காங்கிரஸ் சோஷலிஸ்ட்களிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

காங்கிரஸ் இந்திரா காங்கிரஸ், சிண்டிகேட் காங்கிரஸ் என்றும் இரண்டாகப் பிரிந்தது. இந்திரா காந்தியின் எதேச்சதிகாரத்தை எதிர்த்து ஜெயப்பிரகாஷ் நாராயணனால் 1975, மே 6-ம் தேதி டெல்லியில் நடத்தப்பட்ட பேரணியில் 3லட்சம் மக்கள் கூடியதாக இரா.செழியன் குறிப்பிடுகிறார். 1975 ஜூன் 12-ம் தேதி ரேபரேலி தொகுதியில் அரசு இயந்திரங்களைப் பயன்படுத்தி இந்திராகாந்தி வெற்றி பெற்றது செல்லாது என்று, அவரை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியடைந்த ராஜ்நாராயணன் தொடுத்த வழக்கில் தீர்ப்பளித்தது அலகாபாத் நீதிமன்றம். மேலும் ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடவும் இந்திராவுக்குத் தடை விதிக்கப்பட்டது.

தீர்ப்பு வந்த 13 நாள்களில் நெருக்கடிநிலையைக் கொண்டுவந்தார் இந்திராகாந்தி. நீதித்துறையின் அதிகாரம் செல்லாக்காசாக்கப்பட்டது. அரசுக்கும் காவல்துறைக்கும் வரைமுறையற்ற அதிகாரம் அளிக்கப்பட்டது. யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் காரணம் சொல்லாமல் கைது செய்யலாம், சிறையில் அடைக்கலாம், சித்ரவதை செய்யலாம் என்னும் இருண்ட நிலை உருவானது. நெருக்கடி நிலை குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஷா கமிஷன் அறிக்கையின்படி நெருக்கடிநிலைக் காலத்தில் விசாரணையின்றிச் சிறையில் அடைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,10,806.

மாற்றுக்கருத்துள்ள அத்தனைக் கட்சிகளும் இயக்கங்களும் தலைவர்களும் வேட்டையாடப்பட்டனர். ராம் மனோகர் லோகியாவைப் பின்பற்றிய சோஷலிஸ்ட்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நக்சல்பாரிகளான மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்கள், ஆர்.எஸ்.எஸ், திராவிடர் கழகம், சிண்டிகேட் காங்கிரஸ், தி.மு.க. என வெவ்வேறு சித்தாந்தங்களைக் கொண்டவர்களை ஒரு குடையின்கீழ் தன் எதிரிகளாக்கிக்கொண்டார் இந்திராகாந்தி. பகுத்தறிவு, சுயமரியாதை, சாதி எதிர்ப்பு, மொழிப்பற்று, மொழி ஆதிக்க எதிர்ப்பு, மாநில சுயாட்சி ஆகிய கருத்தாக்கங்களில் இந்தியாவுக்கு முன்னோடி மாநிலமாக விளங்கும் தமிழகம், ஜனநாயகத்துக்கான குரலை எழுப்புவதிலும் முன்னோடியாக விளங்கியது.

நெருக்கடிநிலைக்கு எதிராக உரத்த குரலை எழுப்பினார் அப்போதைய தமிழக முதல்வராக இருந்த கலைஞர் மு.கருணாநிதி. தி.மு.க மீது பல அரசியல் விமர்சனங்கள் இருந்தபோதும் இந்திய ஜனநாயகத்தை மீட்டெடுக்க அது மேற்கொண்ட முயற்சிகளும் செயல்பாடுகளும் மறுக்க முடியாதவை. ஜார்ஜ் பெர்னாண்டஸ், நீலம் சஞ்சீவி ரெட்டி போன்ற தலைவர்கள் நெருக்கடி நிலைக் கைதுகளில் இருந்து தப்ப, தமிழகத்தில் அடைக்கலம் புகுந்தனர். காமராஜரை எதிர்த்து அரசியலை முன்வைத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க தலைவர் கருணாநிதியும் காமராஜரும் ஜனநாயகத்தைக் காக்க கைகள் கோத்தனர். ஆத்திரமடைந்த இந்திரா காந்தியால் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. லால் பகதூர் சாஸ்திரி தாஷ்கண்டில் மரணமடைந்த பிறகு இந்திராகாந்தியை யார் பிரதமர் ஆக்கினாரோ அந்த காமராஜர், இந்திராகாந்தியால் சிறையிலடைக்கப்பட்டார்.

 Indira Gandhi

தி.மு.க மீது கடும் அடக்குமுறை கட்டவிழ்க்கப்பட்டது. முரசொலி மாறன், துரைமுருகன், ஆற்காடு வீராசாமி என தி.மு.கவின் பல முன்னணித் தலைவர்கள் சிறையிலடைக்கப்பட்டனர். சிறையில் காவல்துறை அதிகாரி அறைந்ததால் ஆற்காடு வீராசாமி செவித்திறனை இழந்தார். ஒரு முன்னாள் முதலமைச்சராக இருந்தபோதும் கருணாநிதி வீட்டுக்குள் நுழைந்த காவல்துறை, அவரது குடும்பத்துப் பெண்களை அவமரியாதைக்குரிய விதத்தில் நடத்தியது. அதுவரை நேரடி அரசியலில் நுழையாத மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். சிறையில் மு.க.ஸ்டாலினுக்கு விழுந்த உதையை, குறுக்கே விழுந்து தான் வாங்கிக்கொண்ட மேயர் சிட்டிபாபு மரணமடைந்தார். அவரது சிறைச்சாலை டைரிக் குறிப்புகள் மிசா காலத்துக் கொடுமைகளைச் சொல்லும்.

கருணாநிதியின் கார் டிரைவர்கூட, `இனி உங்களுக்கு கார் ஓட்ட முடியாது' என்று பயந்துபோய் பணியிலிருந்து விலகினார். தி.மு.க.வின் முக்கிய நிர்வாகி கண்ணப்பன் கருணாநிதிக்கு கார் ஓட்டியதால் `காரோட்டி கண்ணப்பன்' என்று அழைக்கப்பட்டார். கட்சியின் முக்கிய நிர்வாகிகள் எல்லாம் கைது செய்யப்பட்ட நிலையில் நெருக்கடிநிலைக் கொடுமைகளைக் கண்டித்து சென்னையில் தனி ஆளாகக் கருணாநிதி துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தார். பத்திரிகைகள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டன. குறிப்பாக முரசொலி, எமெர்ஜென்சியை எதிர்த்த துக்ளக் இரண்டும் கடுமையான தணிக்கைக்கு ஆளாயின. யார் யாரெல்லாம் கைது செய்யப்பட்டார்கள் என்பது வெளியில் தெரியாத நிலை. கருணாநிதி இதை வெளிப்படுத்த ஒரு தந்திரத்தை மேற்கொண்டார்.

அண்ணாவின் நினைவுதினமான பிப்ரவரி 3 அன்று `அண்ணாவின் நினைவுதினத்தில் கலந்துகொள்ள இயலாதவர்கள்' என்று ஒரு பட்டியலை வெளியிட்டார். அது மிசாவில் கைது செய்யப்பட்டவர்களின் பட்டியல். கி.வீரமணி முதல் நடிகவேள் எம்.ஆர்.ராதா வரை திராவிடர் கழகத்தின் முன்னணித் தலைவர்களும் மிசாவில் கைது செய்யப்பட்டனர். `விடுதலை'யும் தணிக்கையால் பாதிக்கப்பட்டது. `தி.மு.க.வை ஆதரிக்கக்கூடாது' என்று அப்போதைய திராவிடர் கழகத் தலைவர் மணியம்மைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டும் அதை அவர் ஏற்க மறுத்தார். இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர்களும் சிறைக்கொடுமைகளை அனுபவித்தனர். `இந்திராகாந்தியின் 20 அம்சத் திட்டங்கள் முற்போக்கானவை' என்று நெருக்கடிநிலையை ஆதரித்த ஒரே தேசியக்கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. பின்னாள்களில் தன் நிலைப்பாடு தவறானது என்று சுயவிமர்சனம் செய்துகொண்டது.

 Indira Gandhi and Sanjay Gandhi

ஜார்ஜ் பெர்னாண்டஸ் கைவிலங்குடன் நெருக்கடிநிலைக்கு எதிராக முழக்கம் எழுப்பும் புகைப்படம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. ஜார்ஜ் பெர்னாண்டஸ், இளம் துருக்கியர் என்றழைக்கப்பட்ட சந்திரசேகர், மொர்ராஜி தேசாய், சரண்சிங், வாஜ்பாய், அத்வானி என எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறையிலடைக்கப்பட்டனர். நாடே என்ன நடக்கிறது என்று தெரியாத இருண்ட அறையானது. கர்நாடகாவில் சினேகலதா ரெட்டி என்னும் நடிகை சிறையில் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். கேரளாவில் ராஜன் என்னும் மாணவர் காவல்துறையினரால் அழைத்துச்செல்லப்பட்டபிறகு என்ன நடந்தது என்றே தெரியாத நிலை. மிசா தளர்த்தப்பட்ட பிறகு அவரது தந்தையால் தொடுக்கப்பட்ட ராஜன் வழக்கு, புகழ்பெற்ற ஒன்று. இப்படி இந்தியாவெங்கும் மிசா கொடுமைகளைச் சொல்ல ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஏராளமான கதைகள் உண்டு.

1977 மார்ச் 21ல் நெருக்கடிநிலை விலக்கிக்கொள்ளப்பட்டது. 21 மாதங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட நெருக்கடிநிலை இந்திய ஜனநாயகத்தை, ஊடகங்களின் வெளிப்பாட்டு உரிமையை, கருத்துச்சுதந்திரத்தை, பல உயிர்களைப் பலிகொண்டுவிட்டு அடங்கியது. `முழுப்புரட்சி' என்னும் தத்துவத்தை முன்வைத்து இந்திராவுக்கு எதிராக மக்களைத் திரட்டினார் ஜெயப்பிரகாஷ் நாராயணன். தேர்தலில் இந்திராகாந்தி படுதோல்வியடைந்தார். எதிர்க்கட்சிகளின் கூட்டணியுடன் ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது. ஆனால் மொர்ராஜி தேசாய், சரண்சிங் போன்ற தலைவர்களின் உள்முரண்களால் விரைவிலேயே ஜனதா ஆட்சி கவிழ்ந்தது. மீண்டும் ஆட்சிக்கு வந்த இந்திரா காந்தி, நெருக்கடி நிலையைக் கொண்டுவந்ததற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்டார்.

 இந்திரா- ஜெயப்பிரகாஷ் நாராயணன்

நெருக்கடிநிலைக்காலத்தின் அழுத்தமான சுவடுகள் இந்தத் தலைமுறை அறியாதவை. இன்னும் சொல்லப்போனால் இந்தக் கட்டுரையை எழுதியிருக்கும் நானே நெருக்கடிநிலைக்காலத்தில் பிறக்காதவன். ஆனால் அந்த இருண்டகாலத்தின் கொடுமைகளைச் சொல்லும் ஏராளமான இலக்கியப் பதிவுகள், அரசியல் பதிவுகள் உள்ளன. ஜனநாயகத்துக்கான உரத்த குரலை ஒலிப்பதில் எப்போதும் தளர்ந்துவிடக்கூடாது என்பதை அவை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தியபடி உள்ளன. இப்போது நெருக்கடிநிலைக்காலம் இல்லையென்றாலும் அதன் சுவடுகள் இல்லாமல்போய்விடவில்லை.

மோடியும் ஒவ்வோராண்டும் எமெர்ஜென்சி தினத்தை நினைவுகூர்கிறார். அவரது முன்னோடிகளான வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் சிறைக்கொடுமைகளுக்கு உள்ளானவர்கள் என்ற முறையில் எமெர்ஜென்சி கொடுமைகளை நினைவுகூர்வதற்கு அவருக்கு முழு உரிமையுண்டு. ஆனால் அதிலிருந்து அவர் பாடங்களைக் கற்றுக்கொண்டாரா என்பதுதான் முக்கியமான கேள்வி. இந்திரா ஆட்சிக்காலத்தில் நீதித்துறையின் அதிகாரம் பறிக்கப்பட்டது என்றால் மோடி ஆட்சிக்காலத்தில் சுயேச்சை நிறுவனங்களான நீதித்துறை, சி.பி.ஐ, ரிசர்வ் வங்கி ஆகியவற்றின் அதிகாரங்கள் பறிக்கப்படுவது குறித்து உள்ளிருந்தே விமர்சனக் குரல்கள் எழுகின்றன. தங்களுக்குச் சாதகமான தீர்ப்புகள் வழங்கிய நீதிபதிகள் எம்.பிக்களாகவும் ஆளுநர்களாகவும் நியமிக்கப்படுகின்றனர். நீதித்துறையைக் களங்கப்படுத்தும் மாபெரும் ஊழலைத்தான் மோடி அரசு செய்துகொண்டிருக்கிறது.

 Modi - Amitshah

இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது என்றால் மோடி ஆட்சிக்காலத்தில் நுழைவுத்தேர்வுகள் என்ற பெயரில் மாநிலங்களின் கல்வி உரிமைகள் மறுக்கப்படுகின்றன. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பலமுறை எதிர்க்கட்சிகள் ஆண்ட மாநில அரசுகள் கலைக்கப்படுகின்றன. மோடி ஆட்சிக்காலத்தில் எதிர்க்கட்சி அரசுகள் கலைக்கப்படுவதில்லை; மாறாக குதிரைபேரம் நடத்தி எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி அரசுகள் கவிழ்க்கப்படுகின்றன. நீட் தொடங்கி சமீபத்தில் கொண்டுவரப்பட்டுள்ள மின்சாரச் சீர்திருத்த சட்டம் வரை மாநில அரசுகளின் அதிகாரங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கப்பட்டு மத்தியில் அதிகாரங்கள் குவிக்கப்படுகின்றன. மாநில அரசுகளை அதிகாரமற்ற அரசுகளாகவும் அடிமை அரசுகளாகவும் மாற்றியுள்ளது மோடி அரசு.

எமெர்ஜென்சி இல்லைதான். ஆனால் ஆனந்த் டெல்டும்டே முதல் ரொமிலா தப்பர் வரை மாற்றுச்சிந்தனையாளர்கள், அறிவுஜீவிகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். கௌரி லங்கேஷ், தபோல்கர், கல்புர்கி என மாற்றுக்கருத்துகளை முன்வைத்தவர்கள் மதவெறியர்களால் கொல்லப்படுகின்றனர். பசுவின் பெயராலும் ஜெய்ஶ்ரீராம் சொல்லச்சொல்லியும் கும்பல் வன்முறையால் கொலைகள் நடக்கின்றன. புத்தகங்கள், திரைப்படங்கள் முதல் வெப்சீரிஸ் வரை படைப்புகள் அச்சுறுத்தப்படுகின்றன. எமெர்ஜென்சி கொடுமைகளை நினைவுகூர்ந்தபடிதான் மோடி அரசும் அதன் ஆதரவாளர்களும் கருத்துச்சுதந்திர மறுப்பாளர்களாகச் செயற்படுகின்றனர். மோடியின் ஆணையை ஏற்றுச் செயற்படும் அடிமை அரசான தமிழக அரசும் கைதுகளிலும் வழக்குகளிலும் பாரபட்சம் காட்டுகிறது.

 கருத்துச் சுதந்திரம்

உச்சநீதிமன்றத்தை இழிவுபடுத்திய ஹெச்.ராஜா, பெண்பத்திரிகையாளர்கள் மீது அவதூறு பரப்பிய எஸ்.வி.சேகர் போன்றோர் மீது கைது நடவடிக்கைகள் இல்லை. ஆனால் சி.ஏ.ஏ.வுக்கு எதிராகக் கோலம் போட்டாலும் கைது. அரசை விமர்சிப்பவர்களும் எதிர்க்கட்சித் தலைவர்களும் சிறுவழக்குக்கும் கைது செய்யப்படுகின்றனர். பழங்குடியினச் சிறுவனை செருப்பைக் கழற்றவைத்த திண்டுக்கல் சீனிவாசன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத எடப்பாடி அரசுதான் ஒரு கூட்ட அரங்கில் பேசிய ஆர்.எஸ்.பாரதியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்கிறது. இப்படி ஏராளமான உதாரணங்களை அடுக்கலாம்.

நெருக்கடிநிலைக்காலம் என்பது 21 மாதங்களில் மட்டும் முடிந்துவிடுவதில்லை. ஜனநாயகத்துக்கும் கருத்துச் சுதந்திரத்துக்குமான போராட்டம் என்பதும் 1975 உடன் முடிந்துவிடவில்லை; முடியப்போவதுமில்லை.

Disclaimer

Disclaimer

This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt Publisher: Vikatan