News18 தமிழ்

411k Followers

தற்போதைய எம்.எல்.ஏ-க்கள் சொத்துமதிப்பு, குற்றவழக்குகளில் திமுக அதிகம் - முழு விவரம்

13 Mar 2021.5:07 PM

தமிழகத்தில் தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் முண்டியடித்துக் கொண்டு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் 204 பேர் சமர்பித்த ஆவணங்களை ஆய்வு செய்ததில், 157 பேர் கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்து மதிப்பை கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.

அதிகபட்சமாக, அண்ணா நகர் தொகுதி திமுக எம்.எல்.ஏ எம்.கே.மோகனுக்கு 170 கோடி ரூபாய்க்கு சொத்து உள்ளது. அவருக்கு அடுத்த இடத்தில் ஆலங்குளம் திமுக எம்.எல்.ஏ பூங்கோதை ஆலடி அருணா 37 கோடி ரூபாய் சொத்துடன் உள்ளார். ராணிபேட்டை திமுக எம்.எல்.ஏ., ஆர்.காந்திக்கு 36 கோடி ரூபாய்க்கு சொத்து உள்ளது. குறைந்தபட்சமாக, பவானிசாகர் அதிமுக எம்.எல்.ஏ ஈஸ்வரன், வெறும் 4 லட்ச ரூபாய் சொத்துகளுடன் இருக்கிறார். அவரை தொடர்ந்து, கே.வி.குப்பம் அதிமுக எம்.எல்.ஏ லோகநாதன் 14 லட்ச ரூபாயுடனும், பத்மநாபபுரம் திமுக எம்.எல்.ஏ மனோ தங்கராஜ் 16 லட்ச ரூபாய் சொத்துகளுடனும் மிகக் குறைந்த சொத்துகளை வைத்திருக்கும் எம்எல்ஏக்களாக உள்ளனர்.

சராசரியாக அதிமுக எம்.எல்.ஏக்களின் சொத்து மதிப்பு 3 கோடியே 49 லட்ச ரூபாயாகவும், திமுக எம்.எல்.ஏக்களின் சொத்து மதிப்பு 9 கோடியே 49 லட்சமாகவும் உள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 7 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு 3 கோடியே 72 லட்ச ரூபாயாக உள்ளது.

தற்போது பதவியில் உள்ள 38 எம்.எல்.ஏக்கள், தங்கள் மீது மோசமான குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளதாக ஆவணங்களை சமர்பித்துள்ளனர். அதில், 22 பேர் திமுகவையும், 13 பேர் அதிமுகவையும் சேர்ந்தவர்கள் ஆவர். மேலும், 89 எம்.எல்.ஏக்களின் கல்வித் தகுதி 5 முதல் 12ம் வகுப்பு வரையில் மட்டுமே எனவும், 110 பேர் மட்டுமே பட்ட படிப்பை முடித்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
Disclaimer

Disclaimer

This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt Publisher: News18 Tamil

#Hashtags