தி இந்து தமிழ்

971k Followers

13 ஆண்டு இடைவெளிக்கு பிறகு இந்திய நேயர்களுக்காக ஒலிபரப்பை மீண்டும் தொடங்கும் கொழும்பு வானொலி

08 Nov 2021.06:06 AM

13 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனம் இந்திய நேயர்களுக்காக கொழும்பு சர்வதேச வானொலி ஒலிபரப்பை தொடங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

லண்டன் பிபிசி தமிழோசை, சிங்கப்பூர் ஒலி, மலேசிய வானொலி கழகம், பாகிஸ்தான் சர்வதேச வானொலி, சீனதமிழ் வானொலி, வாய்ஸ் ஆப் அமெரிக்கா,ஜெர்மன் ரேடியோ, ஆஸ்திரேலியா ஆகிய வெளிநாட்டு வானொலி நிலையங்கள் தமிழ் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பின.

இருப்பினும் முதன் முதலில் தமிழ் வானொலி ஒலிபரப்பை தொடங்கியது இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனம் ஆகும். 1925-ல் 'சிலோன் ரேடியோ' என்றபெயரில் நிறுவப்பட்ட இலங்கை ஒலி பரப்புக் கூட்டு ஸ்தாபனத்துக்குத்தான் உலகின் 2-வது வானொலி நிலையம் என்றபெருமையும் உண்டு. பிபிசி வானொலி 1922-ல் லண்டனில் நிறுவப்பட்டது.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாப னம் தனது வர்த்தக சேவை பிரிவை 30.9.1950-ல் தொடங்கியதும் இந்திய துணைக் கண்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இமயமலை உச்சியில் கால் பதித்த எட்மண்ட் ஹிலாரி, டென்சிங் நார்கே ஆகியோர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனத்தின் வர்த்தக ஒலிபரப்பை முதலில் செவிமடுத்தார்கள்.

பொங்கும் பூம்புனல், நேயர் விருப்பம், நீங்கள் கேட்டவை, அன்றும் இன்றும், புது வெள்ளம், மலர்ந்தும் மலராதவை, இசைத் தேர்தல், பாட்டுக்குப் பாட்டு, இசையும் கதையும், இன்றைய நேயர், விவசாய நேயர் விருப்பம், இரவின் மடியில் எனத் தூய தமிழில் புதுமையான நிகழ்ச்சிகளை வழங்கி தமிழகத்தில் தனக்கென்று நேயர்கள் வட்டத்தை இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனம் உருவாக்கிக் கொண்டது.

மேலும் அதில் பணியாற்றிய ஒலிபரப்பாளர்கள் எஸ்.பி.மயில்வாகனன், கே.எஸ். ராஜா, பி.ஹெச்.அப்துல் ஹமீது, ராஜேஸ்வரி சண்முகம் ஆகியோருக்கு தமிழகத்தின் முன்னணி சினிமா நட்சத்திரங்களுக்கு இருந்த ரசிகர்களின் எண்ணிக்கையைவிட நேயர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருந்தனர்.

இன்றளவும் உலகில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழ், சிங்களம், ஆங்கிலப் பாடல்களின் இசைத் தட்டுக்களைக் கொண்டே ஒரே வானொலி நிலையம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனம் மட்டுமே.

இலங்கை உள்நாட்டுப் போரினால் தமிழகத்தில் ஏற்பட்ட கடும் எதிர்ப்புகளால் இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனம் தனது இந்திய நேயர்களுக்கான கொழும்பு சர்வதேச ஒலிபரப்பை கடந்த 31.5.2008 அன்று நிறுத்திக் கொண்டது. மேலும் தமிழகத்தில் பண்பலை வானொலி நிலையங்கள் பரவலாக தொடங்கப்பட்ட பிறகும்கொழும்பு சர்வதேச ஒலிபரப்பு தமிழகத்தில் தவழாதா என்ற ஏக்கம் பல்வேறு நேயர்களுக்கு இருந்து வருகிறது.

ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய கடற்கரை மாவட்டத்தில் உள்ள வானொலி நேயர்கள் இலங்கை ஒலிபரப்பிய சக்தி, தென்றல் போன்ற பண்பலைகளை தொடர்ந்து கேட்ட வண்ணம் இருந்தனர்.

இந்நிலையில் கொழும்பு சர்வதேச வானொலி ஒலிபரப்பை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து ஒலிபரப்பை மீண்டும் தொடங்கஇலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனத் தலைவர் ஹட்சன் சமரசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்கான தீர்மானம் தீபாவளி அன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

இத்தகவலை இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனத்தின் தமிழ்ச் சேவைகளின் பொறுப்பாளர் வீரசிங்கம் ஜெய்சங்கர் உறுதி செய்துள்ளார்.

Source : www.hindutamil.in

Disclaimer

Disclaimer

This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt Publisher: The Hindu Kamadenu

#Hashtags