Kamadenu

41k Followers

கொட்டிக் கிடக்குது வேலை... கொடுக்கத் தயங்குதே மோடி அரசு!

01 May 2022.05:29 AM

'இளைஞர்களுக்கு வேலைகொடு' என்ற கோஷத்துடன் கன்னியாகுமரி, புதுச்சேரி, சென்னை, கோயம்புத்தூர் என நான்கு மூலைகளில் இருந்து சுமார் 3,500 கிலோ மீட்டர் தூர சைக்கிள் பிரச்சாரப் பேரணியைத் தொடங்கி இருக்கிறது மார்க்சிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (டி.ஒய்.எஃப்.ஐ).

இந்தப் பேரணியானது மே 1-ம் தேதி தொழிலாளர் தினத்தில் திருச்சியில் பொதுக்கூட்டமாக சங்கமிக்கிறது. கன்னியாகுமரியிலிருந்து கிளம்பிய பேரணிக்கு தலைமை ஏற்றிருந்த இந்த அமைப்பின் தமிழ் மாநில தலைவர் ரெஜீஸ்குமாரைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

 ரெஜீஸ்குமார்

சைக்கிள் பேரணியின் மைய நோக்கம் பற்றிச் சொல்லுங்களேன்...

சுதந்திர இந்தியாவில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை நிலவுகின்றது. அரசின் நிரந்தர பணிகளை முற்றிலும் ஒழித்துவிட்டு, அவுட்சோர்சிங் முறையிலும், திட்டகால அளவின் அடிப்படையிலும் மத்திய அரசு பணியாளர்களை நியமிக்கிறது. அவர்கள் காட்டிய பாதையிலேயே பெரும்பான்மை மாநிலங்களும் இயங்குகின்றன. கரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட செவிலியர்களை அந்த திட்டக்காலம் முடிந்ததும் வேலையைவிட்டு அனுப்பிவிட்டது ஒரு உதாரணம். சுகாதாரத்துறைக்கு இப்போதைய சூழலில் கூடுதல் மனிதவளம் தேவை. ஆனால், அப்படியான பணியிடத்தை உருவாக்கக்கூட மனம் இல்லாததை எப்படி புரிந்துகொள்வது? நிரந்தர பணியிடம் வேண்டும் என்ற போராட்டம் ஒருபக்கம் என்றால், தொழிலாளர் நலச்சட்டத்திலும் திருத்தம் கொண்டுவந்து உழைப்பைச் சுரண்டுகின்றனர்.

முன்பெல்லாம் ஒரு நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல், தொழிலாளர்களை அப்ரன்டீஸாக பயன்படுத்தமுடியாது. ஆனால் இப்போதைய சட்டத்தில், எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் அப்படி பயன்படுத்தலாம். 100 சதவீத பணியாளர்களுமே அப்ரன்டீஸ் முறையில் இருக்கலாம் என சட்டத்தைத் திருத்திவிட்டது மத்திய அரசு. முன்பு உற்பத்தித் துறையில் நிரந்தரப் பணியாளர்களையே ஈடுபடுத்தமுடியும். இப்போது, அதிலும் ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பயன்படுத்தலாம் என சட்டத் திருத்தம் கொண்டு வந்து விட்டனர். இதையெல்லாம் மக்கள் மன்றத்தில் கொண்டுசென்று இளைஞர்களுக்கு வேலை என்னும் விழிப்புணர்வை ஊட்டவும், இதை மத்திய - மாநில அரசுகளிடம் வலியுறுத்தவுமே இந்தப் பேரணி.

 பேரணியில் ரெஜீஸ்குமார் ...

அரசே வேலைகொடுக்கும் அளவுக்கு நாட்டில் சாதகமான சூழல் இருக்கிறதா?

ஏன் இல்லை? ரயில்வே துறையில் மட்டும் 3 லட்சம் வேலைவாய்ப்புகள் நிரப்பப்படாமல் உள்ளது. தமிழ்நாட்டில் 6 லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக இருப்பதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனே சட்டப்பேரவையில் அறிவித்தார். குறைந்தபட்சம் இதையெல்லாம்கூட ஏன் நிரப்பவில்லை? நரேந்திரமோடி அரசின் கொள்கைகள் உள்நாட்டு தொழில்களை முற்றாக சிதைத்துவிடுகிறது. இந்தியாவின் முதுகெலும்பான விவசாயத்தைப் பாதுகாப்பு இல்லாத தொழிலாக மத்திய அரசு மாற்றிவிட்டது. விவசாயத்தை கைவிட்ட திருவாரூர் சுற்றுவட்டார இளைஞர்கள்தான் திருப்பூருக்கும், கோயம்புத்தூருக்கும் மில்களில் வேலைசெய்ய இடம்பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்து அதிகவேலை கொடுப்பது சிறு, குறு தொழில் துறை. பத்து பதினைந்து பேரைக்கொண்டு குறைவான முதலீட்டில் ஆரம்பிக்கப்படும் தொழில் இது. சிவகாசி பட்டாசு ஆலை, தீப்பெட்டி ஆலை என இந்தப்பட்டியலில் வரும் தொழில்களையும் ஜி.எஸ்.டி என்னும் பெயரில் நசுக்கிவிட்டனர்.

ஜி.எஸ்.டி, பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் தமிழகத்தில் 50 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டதாக சட்டப்பேரவையில் 2018-ம் ஆண்டே ஓபிஎஸ் சொன்னார். கார்ப்பரேட் நலன் சார்ந்த பாஜக அரசின் திட்டங்கள் அனைத்து வேலைவாய்ப்பையும் நசுக்கிவிட்டது. அரசின் கொள்கைகளை மாற்றியமைத்தாலே பெரும்பகுதி வேலைவாய்ப்பின்மை போய்விடும். ஆனால், வேலைவாய்ப்பின்மை இருக்கவேண்டும் என்பதே முதலாளித்துவ சிந்தாந்தம். அப்போதுதான் அவர்களுக்கு குறைவான சம்பளத்துக்கு ஆள் கிடைப்பார்கள். அரசின் கொள்கை முடிவு மாறாதவரை வேலைவாய்ப்பின்மை தொடரும். நாங்களும் ஓயாமல் போராடிக்கொண்டே இருப்போம். மொத்தத்தில் கொட்டிக் கிடக்கிறது வேலை. மோடி அரசு கொடுக்கத் தயங்குகிறது.

அரசிடம் தான் வேலை கேட்கவேண்டுமா... சுய தொழிலிலும் சாதிக்கலாம்தானே?

சுயதொழில் தொடங்க அரசிடம் நிறைய திட்டங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் அப்படி வருவாய் ஈட்டும் தொழிலுக்கான வாய்ப்பையோ, வங்கிக்கடன் கொடுப்பதற்கான வழியையோ பாதையையோ காட்டுகிறதா அரசு? சீனாவில் குடிசைத்தொழில்தான் அதிகம். இந்தியாவில் தேர்தல் வந்தால் சீனாவில் கட்சிக் கொடிகள் தயாரிப்பு குடிசைத்தொழிலில் வேகமாக நடக்கும். அதற்கு ஏஜென்ஸி வைத்து அவர்களை சீசன் தொழிலுக்கு ஏற்ற தயாரிப்புகளை செய்ய ஊக்குவிப்பதே அந்நாட்டு அரசாங்கம் தான்.

ஆனால், வங்கிக்கடன் கேட்டால் சொத்து இருக்கிறதா? சிபாரிசு கையெழுத்துப் போட ஆள் இருக்கிறதா? எனக் கேட்கும் நம்நாட்டில் சுயதொழில் அனைவருக்கும் சாத்தியமே இல்லை. அதற்காக, அரசு வேலை மட்டுமே தீர்வு என சொல்லவில்லை. இந்திய நாட்டுக்கே உரித்தான வளமான தொழில்களை வளர்க்கும் திட்டங்கள் மோடி அரசிடம் இல்லை. இந்தியா முழுவதும் 3 கோடி அரசு பணியிடங்கள் காலியாக இருக்கிறது. அதை நிரப்புங்கள் எனச் சொல்வது நம் உரிமை.

கரோனா தான் பலரது வேலையிழப்பு, ஊதிய வெட்டுக்கு காரணம் என்கிறார்களே?

அனைத்து விஷயங்களுக்கும் பலியைத்தூக்கி கரோனா மேல் போடும் காலம் இது. இதே கரோனா காலக்கட்டத்தில் அதானி, அம்பானியின் சொத்துமதிப்பு உயர்ந்துள்ளது. சம்பள உயர்வு தொழிலாளர்களுக்கே சூறையாடப்பட்டுள்ளது. முதலாளிகள், முதலாளியாகவேதான் இருக்கிறார்கள்.

தமிழகத்தில் வேலைவாய்ப்பைப் பெருக்க ஆக்கபூர்வமான யோசனைகள் எதுவும் இருக்கிறதா?

உள்ளூர் தொழில்களைப் பாதுகாத்தாலே தமிழகத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகளை பெருக்கலாம். நாகர்கோவிலை ஒரு உதாரணமாக எடுத்துக்கொண்டால், அங்கே ஆயிரக் கணக்கில் இருந்த நகைப்பட்டறைகள் இப்போது எங்கேபோனது? சேலம் மாவட்டத்தில் கொலுசு செய்யும் வேலையில் மட்டும் 3 லட்சம் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அந்தத் தொழிலும் இப்போது நசிந்துவிட்டது. அதற்கு வெளிநாடுகளில் இருந்து கொலுசுகள் கொள்முதல் செய்வதுதான் காரணம். உள்நாட்டில் தொழிலைப் பாதுகாக்காமல் இறக்குமதிக்கு கம்பளம்விரித்து வரவேற்றால் அத்தனை சிறுதொழில்களும் அழியும்.

குமரி மாவட்டத்தில் அதிகமாகக் கிடைக்கும் ரப்பரை மையப்படுத்தி ரப்பர் தொழிற்சாலை, தோவாளை மலர்களைப் மையப்படுத்தி நறுமணத் தொழிற்சாலை என மாநில அரசு கவனிக்கத் துவங்கினால் அந்தந்த மாவட்ட இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள். இப்படி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பிரத்யேகத் தொழில்கள் இருக்கின்றன.

 ரெஜீஸ்குமார்

பொதுமக்கள் உங்களின் இந்த சைக்கிள் பேரணியை எப்படிப் புரிந்துகொள்கிறார்கள்?

கன்னியாகுமரியில் பாஜகவினர் சிலரே கூட இந்தக் கோரிக்கைகளைக் கேட்டுவிட்டு நல்லகோரிக்கை என பிரச்சார உண்டியலில் பணம் போட்டதாக தோழர்கள் சொன்னார்கள். கல்லூரி மாணவர்கள் மத்தியில் பேசும்போது நமக்காகத் தானே இவர்கள் பேசுகிறார்கள் என எங்களை சூழ்ந்துகொண்டனர். மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி என்னும் கிராமத்தில் அந்தப் பகுதியில் வெள்ளரிக்காய் விற்றுக்கொண்டிருந்த காட்டுராணி என்ற பெண், ஒரு சாக்கு வெள்ளரிக்காயை கொண்டுவந்து சாப்பிடக் கொடுத்தார். சில போலீஸ்காரர்களே வந்து நல்லகோரிக்கை எனக் கைகுலுக்கி சென்றதும் நினைவில் வருகிறது.

மோடியை விமர்சித்தால் சாமானிய மக்களே கடைக்குப் போய் துண்டு வாங்கிவந்து போடுகிறார்கள். மக்கள் எங்கள் கோரிக்கையின் நியாயத்தையும், மத்திய அரசின் துரோகத்தையும் தெளிவாக புரிந்திருக்கிறார்கள். மதவாதத்தை முன்னிறுத்தும் பாஜகவின் அரசியலையும் நாங்கள் அம்பலப்படுத்துவதையும் மக்கள் காதுகொடுத்துக் கேட்கிறார்கள். இதுவே நல்ல மாற்றம் தான்.

Disclaimer

Disclaimer

This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt Publisher: Kamadenu